டிக் டாக், ட்விட்டர், டிரம்ப் - 2024 தேர்தல் வென்ற வரலாறு
2020 நவம்பர் 7 - ஜோ பைடன் மற்றும் கமலா ஹாரிஸ் வென்று விட்டனர். ஆனால் அதுவரை அமெரிக்க வரலாற்றில் எந்த அதிபரும் செய்யாதவாறு டொனால்ட் டிரம்ப் தன தோல்வியை ஒப்புக்கொள்ள மறுத்துக் கொண்டிருக்கிறார். அன்று அமெரிக்காவின் மிக அதிகம் வெறுக்கப்பட்ட அதிபராக வெளியேற்றப்பட்ட டிரம்ப் அன்றிலிருந்து 4 வருடம் கழித்து ஒரு முழு மெஜாரிட்டியுடன் மீண்டும் அதிபராவார் என்று யாரும் கற்பனை கூட செய்துக்கூட பார்த்திருக்க மாட்டார்கள். இது சாத்தியமானதற்கு பின்னால் சமூக வலைத்தளங்களின் வீச்சும், பாராம்பரிய பத்திரிகைகளின் வீழ்ச்சியும், பொதுமக்கள் இதழியல் (Citizen Journalism) எழுச்சியும் அடங்கியுள்ளது.
கொரோனாவுக்கு பின்னான அமெரிக்காவில்
இரண்டு சமூக வலைத்தளங்கள் அசுர வேகம் எடுத்தன. ஒன்று நமக்கு ஏற்கனவே அறிமுகமான டிக்
டாக் (TikTok). அனைத்து வகை வீடியோக்களும் டிக்டாக்கில் பகிரப்பட, அதிதீவிர இடதுசாரிகளின்
கருத்துக்களை முதல் முறையாக அனைத்து அமெரிக்கர்களும் கேட்க ஆரம்பித்தனர். ஆனால் கேட்டவற்றை அவர்கள் ரசிக்கும் விதமாக இல்லை. முக்கியமாக
பாலினம் பற்றிய சர்ச்சைகள் 2020க்கு பின் அமெரிக்க பதின் பருவத்தினர் தங்களை
திருநராக கருதுவது அதிகரிக்க தொடங்கியது. இதை டிக் டாக்கின் பக்கவிளைவாக வலதுசாரிகள்
பலரும் நினைக்க ஆரம்பித்தனர்.மிக முக்கியமாக
குழந்தைகளுக்கு பாலினம் பற்றிய புரிதலை ஏற்படுத்துகிறோம் என்று தீவிர இடதுசாரிகள் செய்த
செயல்கள் பலருக்கு அசூயை ஏற்படுத்தியது. சிறு
குழந்தைகள் படிக்கும் நூலகங்களில் ஓரினச்சேர்க்கை பற்றிய புத்தகங்கள் படங்களுடன் இடம்பெற்றதிலிருந்து,
Pride Paradeகளில் பெண்கள் போல் ஆபாசமாக உடை அணிந்து ஆண்கள் நடைபோட்டது வரை பல்வேறு
விஷயங்கள் அமெரிக்க பெற்றோரிடம் இது பிள்ளை பிடிக்க வந்த கும்பல் என்ற நினைப்பை விதைக்க
உதவியது. இதை கண்டிக்க வேண்டிய இடதுசாரிகளோ
இதை ஆதரிக்க தொடங்கி விட்டனர். அதன் உச்ச பட்சமாக கலிபோர்னியா மாகாணத்தில் இடதுசாரி
கவர்னர் நியூசாம் பதின் பருவத்தில் ஒரு குழந்தை
பாலினம் மாற்றுவதற்காக பெற்றோரின் அனுமதி பெற
வேண்டிய அவசியம் இல்லை என்று சட்டம் கொண்டு
வந்தது இடதுசாரிகள் குடும்ப அமைப்பை சீர்குலைக்க முயற்சிக்கின்றனர் என்ற பிரச்சாரத்திற்கு
வலு சேர்த்தது.
இந்த நேரத்தில் மிக முக்கியமான
மாற்றமாக அமைந்தது - ட்விட்டர் இலான் மஸ்க் வசம் சென்றது. 2020 சமயத்தில் ட்விட்டர்
நிர்வாகம் பல்வேறு வலதுசாரி ஆதரவாளர்களின்
அக்கவுண்டை தவறான செய்தி பரப்புவதாக முடக்கியது.
இது பேச்சுரிமையை பாதிப்பதாக கூறி அதை மீட்பதற்காகத்தான் ட்விட்டரை வாங்குவதாக
இலான் மஸ்க் அறிவித்தார். அதேபோல அவர் கையில் ட்விட்டர் வந்ததும், பல வலதுசாரி அக்கவுண்ட்களை
மீண்டும் அனுமதித்தது மட்டுமல்லாமல், அவற்றுடன்
அவர் உரையாடியது, பலர் அது வரை இல்லாதது போல வலது சாரி தத்துவங்களை கவனிக்க உதவியது.
வலதுசாரிகள் முட்டாள்கள் என்ற பிம்பம் மறைந்து அவர்கள் தரப்பிலிருக்கும் சில வாதங்களை
சரியென்று மக்கள் ஒப்புக் கொள்ள ஆரம்பித்தனர்.
அதை விட முக்கியமாக இந்த வலதுசாரி
கணக்குகள், லெகஸி மீடியா என்று அழைக்கப்படும் பாரம்பரிய பத்திரிகைகள் மற்றும் டிவி சேனல்களில் வரும் செய்திகளில்
உள்ள இடதுசாரி சாய்வை, செய்திகளை திரிக்கும் விதத்தை சுட்டிக்காட்ட ஆரம்பித்தனர். மிக
சமீபத்திய உதாரணமாக, சில நாட்களுக்கு முன் டொனால்ட் ட்ரம்ப் லிஸ் சென்னி என்ற அவரின்
கட்சியை சார்ந்த பெண் அரசியல்வாதியை பற்றி குறிப்பிடும் போது, “அவர் ஒரு போர் ஆதரவாளர்…
அவர் கையில் துப்பாக்கியை கொடுத்து, அவரை நோக்கி துப்பாக்கிகள் நீளும்போது அவருக்கு
போரின் உண்மை தெரியும்” என்று கூறினார். ஆனால் அனைத்து பத்திரிகைகளும் ட்ரம்ப் லிஸ்
சென்னியை ஃபயரிங் ஸ்குவாடுக்கு முன் நிற்கவைப்பேன்
என்று கூறினார் என்றே செய்தி பரப்பினர். அதை சில மணி நேரத்திலேயே இந்த வலது சாரி கணக்குகள்
பொய் என்று நிரூபித்து காட்டின. இதுபோன்ற பல நிகழ்வுகளால் பாரம்பரிய பத்திரிக்கைகள்
தரும் செய்திகளை விட ட்விட்டரில் வரும் செய்திகள் நம்பகத்தன்மை வாய்ந்தவை என்ற எண்ணம்
பரவ ஆரம்பித்துவிட்டது.
மூன்றாவது முக்கிய காரணம் நீண்ட
நேர பாட்காஸ்ட். கடந்த இரண்டு வருடங்களில் அசுர வளர்ச்சியைக் கண்டிருக்கும் இந்த சமூக
வலைதள வடிவத்தை ட்ரம்ப் மிகக்கச்சிதமாகப் பயன்படுத்திக் கொண்டார். குறிப்பாக ஜோ ரோகன்
(Joe Roegan) எனப்படும் அமெரிக்காவின் மிக பிரபலமான பாட்காஸ்டருடன் அவர் மூன்று மணி
நேரம் உரையாடியது பலரால் கவனிக்கப்பட்டது. அதற்கு நேர் மாறாக கமலா ஹாரிஸ் இதுபோன்ற
நேரடி பேட்டிகளில் ஈடுபடாதது, அவரை சொல்லிக் கொடுத்து ஆட வைக்கும் பொம்மை என்று பலரையும்
நினைக்கச் செய்தது. விளைவு - டிரம்ப்பின் கருத்துக்கள் பலரை ஈர்த்தது. அவரை முட்டாள் என்றும் பாசிஸ்ட் என்றும் உருவாக்கம்
செய்ய முயன்ற இடதுசாரி முயற்சிகள் தோல்வியில் முடிந்தன.
வரலாற்றில் சில தருணங்களுக்குப்
பின் எதுவுமே முன் போல இருப்பதில்லை. இந்த தேர்தலும் அது போன்ற ஒரு தருணம் தான். இன்று
பொதுமக்கள் இதழியலின் சக்தி நிரூபணம் ஆகி உள்ளது. ஆனால் அது நல்லதிற்கானதா என்பது விவாதத்துக்குரியது.
காரணம் பராம்பரிய பத்திரிகைகளில் இருக்கும் தடுப்புகள் (Checks and balances) இவற்றுக்கு
கிடையாது. அவசரமாக செய்தியை முந்தி தர முயற்சிப்பதால் அவற்றின் உண்மைத்தன்மையை சரிபார்ப்பது
பல சமயம் தவறலாம். அதை விட முக்கியமானது தங்கள் தரப்புக்கு ஏற்றவாறு செய்திகளை திரிக்கலாம்.
இந்த ஆட்சேபணைகள் எல்லாமே பாராம்பரிய பத்திரிகைகளுக்கும் பொருந்தி போவது என்பதுதான்
மிக வருத்தமான நகைமுரண். இந்த தேர்தல் முடிவு அவர்களுக்கு ஒரு அபாயச்சங்கை ஒலித்துள்ளது.
தங்களின் பாதையை திருத்திக்கொள்ளாவிட்டால், நடுநிலையை மீட்டெடுக்காவிட்டால் அவர்கள்
இருப்பை இழக்க நேரிடும் என்று உரக்க கூறியுள்ளது. அவர்கள் உணர்வார்களா?... அமெரிக்காவில் நடக்கும் எதுவும்
உலக அளவில் எதிரொலிக்கும் தன்மையுடையது. அமெரிக்க பாரம்பரிய பத்திரிகைகளின் நம்பகத்தன்மை
மற்றும் நடுநிலைத் தன்மை குறைந்ததும், சாதாரண பொதுமக்கள் இதழியல் (Citizen
Journalism) எழுச்சி கண்டதும் போல நம் தேர்தல்களிலும்
நடக்குமா?... காலம் தான் பதில் சொல்ல வேண்டும்.


Comments
Post a Comment