யார் குற்றம்?
மீண்டும் ஒரு பாலியல் வன்கொடுமை. எப்போது இப்படி ஒரு சம்பவம் நடந்தாலும் சமூக வலைத்தளங்கள் போர்களமாகின்றன. அந்த பெண் என்ன செய்திருக்க வேண்டும் என்று ஒரு தரப்பும் பெண்ணை சொல்லாதே நீ பிள்ளையை எப்படி வளர்க்க வேண்டும் என்று யோசி என்று மற்றொரு தரப்பும் மாறி மாறி அவரவர் கோணங்களை பதிவிடுகின்றனர். ஆனால் சில கேள்விகள் தான் திரும்ப திரும்ப எழுகின்றன. பாலியல் வன்கொடுமை யார் நிகழ்த்துகிறார்கள்? ஏன்?
பாலியல் வன்கொடுமை நிகழ்ந்த உடன்
பலர் சொல்லும் காரணங்கள் மிக எளிமையாக வகைப்படுத்தலாம்.
- நீ ரிஸ்க் எடுத்தே. அப்படித்தானே நடக்கும். (அங்கே ஏன் போனாய்! தனியே ஏன்
இருந்தாய்? போன்றவை)
- நீ அவன் காமத்தை தூண்டினே. அப்படித்தானே நடக்கும். (இப்படி டிரஸ் பண்ணா
அவன் என்ன பண்ணுவான்? ஏன் முதலிலேயே நோ சொல்லலை? போன்றவை)
- நீ சமுதாய கட்டுப்பாட்டை அல்லது வழக்கங்களை மீறிட்டே அப்படித்தானே நடக்கும்.
(லவ் பண்ணான்னு இப்படி போலாமா? அவளே ஒரு பாலியல் தொழிலாளி. அவளுக்கு என்ன பிரச்சினை?
போன்றவை.)
- இது எதிலும் வராவிட்டால் - ரேப் செஞ்சவனுக்கு மனநலப்பிரச்சினை. அவன் செயல்களை
புரிந்துக் கொள்ளவே முடியாது. போன்றவை
இவை எல்லாமே பாலியல் வன்கொடுமை
என்பது காமம் சார்ந்த செயல் என்ற அடிப்படை அனுமானத்தில் சொல்லப்படுகின்றது. அது உண்மையில்லை
என்பது 1970களில் பாலியல் வன்கொடுமையாளர்களிடம் நடத்தப்பட்ட ஆராய்ச்சியிலேயே தெரிய
வந்துள்ளது. கிட்டத்தட்ட 50 வருடங்களாக திரும்ப திரும்ப நிரூபிக்கப்பட்ட முடிவுகள்
இவை.
உண்மையில் பாலியல்
வன்கொடுமையாளர்கள் ஒரே வகையினர் கிடையாது. இன்னும் சொல்லப்போனால் அவர்களை மூன்று வகைப்படுத்தலாம்.
முதலாம் வகை, வாய்ப்பு கிடைப்பதால்
செய்பவர்கள். இவர்களுக்குள் இரண்டு வகை. முதலாமவர்களுக்கு தங்கள் ஆண்மை மேல் சந்தேகம்
இருக்கும். தன்னை பெண்களுக்கு பிடிக்குமா என்று சந்தேகம் இருக்கும். இரண்டாம் வகை,
பெண்கள் மீது அடக்குமுறையை செலுத்த விரும்புவர்கள். இவர்கள் அந்த பெண்களை அவமானப்படுத்த
விரும்புவார்கள். இந்த இரண்டு வகையினருமே வாய்ப்பு அமைகிறது என்னும் போது பெண்களை மிரட்டி
வன்கொடுமை செய்வார்கள். இவர்களுக்கு அந்த பெண்கள் விரும்பி இந்த செயலில் பங்கேற்கிறார்கள்
என்ற ஒரு கற்பனை இருக்கும். வீடு புகுந்து திருடும் போது வன்கொடுமை செய்பவர்கள், தனிமையில்
இருக்கும் பெண்ணிடம் அத்து மீறுபவர்கள் இந்த வகையினர்.
அடுத்த வகையிலான வன்கொடுமையாளரகள்
பெண்களை வெறுப்பவர்கள். இவர்களுக்கு பெண்களை காயப்படுத்த வேண்டும். அதற்கு செக்ஸ் ஒரு
வழிமுறை. சிவப்பு ரோஜா கமல் வகையறாக்கள்.
மூன்றாவது வகையினர் மற்றவர்களை
துன்புறுத்துவதில் இன்பம் காண்பார்கள் (Sadistic Rapist) இவர்களுக்கு செக்ஸையும் தாண்டி
கொடுமைப்படுத்துவதே நோக்கம். நிர்பயா வழக்கில் அந்த பெண்ணுக்கு இழைக்கப்பட்ட கொடுமைகளை
நினைத்துப் பாருங்கள். அதில் காமம் என்பதா உள்ளது? வெறி, ஆத்திரம் என்பதையும் தாண்டி
என்னால் செய்ய முடியும் என்பதால் எவ்வளவு வேண்டுமானாலும் கொடுமை செய்வேன் என்ற நோக்கம்
புலப்படவில்லையா?
மேல் சொன்ன வகைகளில் எதில் காமம்
முதல் காரணமாக இருக்கிறது? காமம் சார்ந்த செயலாக இருந்தாலும் வன்கொடுமையின் நோக்கம்
ஆதிக்கம். இன்னும் இந்த வன்கொடுமையாளர்களிடம் பேசிய போது அவர்களின் பல்வேறு பொதுவான
அம்சங்கள் தெரிய வந்தது.
இவர்களில் பலர், அந்த பெண் விரும்பியே
அந்த செயலில் ஈடுபட்டதாக நம்புகிறார்கள். அவளின் மறுப்புகள் காம விளையாட்டின் ஒரு அங்கம்
என்று நினைக்கிறார்கள். அதை விட முக்கியம், அவளுக்கு இழைக்கப்பட்டது தவறில்லை. அவள்
அந்த கொடுமைக்கு ஆளாக தகுதியானவள் என்றே நம்புகிறார்கள்.
குற்றவுணர்ச்சி இவர்களுக்கு அறவே
கிடையாது. அதே போல் இவர்கள் பச்சாதாபம் அற்றவர்கள். இவர்களில் பலருக்கு மற்றவர்களின்
குறிப்பாக பெண்களின் வலியை உணரவே தெரியவில்லை. இன்னும் சொல்லப்போனால் அந்த வலி அவர்களின்
கற்பனையை, கிளர்ச்சியை தூண்டுகிறது. அவர்களால் ஏற்படும் வலியை குறைத்தே மதிப்பிடுகிறார்கள்.
வேண்டுமென்றே அந்தப் பெண் சின்ன விஷயத்தை பெரிது படுத்துவதாக மனதிற்குள் சொல்லிக் கொள்கிறார்கள்.
(இதெல்லாம் அவ்வளவு சீன் இல்லை) பெண் என்பவள் ஒரு விளங்க முடியாத விஷயமாக, ஒரு
காமப் பொருளாக கருதுகிறார்கள். அவள் அவர்களின் காம இச்சையை பூர்த்தி செய்ய வேண்டியவள்
என்றே நம்புகிறார்கள்.
இப்படி சொல்லுவது அவர்களை ஏதோ பெரிய
வில்லன்கள் போன்று தோன்ற செய்தாலும், பலர் தனிமையில் உழல்பவர்கள். யாருடனும் நெருங்கிய
நட்பு கொள்ள தெரியாதவர்கள். சுயநலவாதிகள், சுயமரியாதை குறைவுடையவர்கள், சுயக்கட்டுப்பாடு
அற்றவர்கள். இப்படிப்பட்டவர்கள் தங்கள் சிந்தனையை மழுங்க செய்யும் போதை பொருட்களை உட்கொள்ளும்போது
முழுமையான மிருகங்கள் ஆகின்றனர்.
இந்த ஆராய்ச்சிகள் தனிபட்ட குணநலன்களையும்
தாண்டி சமுதாயத்தின் பின்னணியும் இவர்கள் பாலியல் வன்கொடுமையாளர்களாக உருவாகுவதற்கு
மிக முக்கிய காரணம் என்று நிரூபித்துள்ளன. பாலியல் வன்கொடுமையாளர்கள் பலர் சிறுவயதில்
அவர்களே உடலியல் ரீதியாகவோ அல்லது பாலியல் ரீதியாகவோ வன்முறைக்கு ஆளானவர்களாக உள்ளனர்.
அவர்கள் உலகை ஒரு ஆபத்தான இடமாகவே பார்க்கிறார்கள் இந்த உலகில் அவர்களின் ஆதிக்கத்தை
காட்டுவதனாலேயே ஜீவிக்க முடியும் என்று நம்புகிறார்கள்.
அதைவிட முக்கியம் அவர்கள் வாழும்
சமுதாயம் வன்கொடுமைக்கு ஆளான பெண்ணை பற்றி என்ன கற்பிதம் செய்துள்ளது என்பது அவர்களை
உருவாக்குவதில் பெரும்பங்கு வகிக்கிறது. வன்கொடுமை என்பது பெண் நினைத்தால் தவிர்க்கப்படக்கூடியது
என்று நினைக்கும் சமுதாய சிந்தனையின் ஆபத்து இதுவே. தனிமையில் இரு நபர்கள் இருந்ததால்,
பப்புகளில் இருந்ததால், உடல் தெரியும் ஆடை அணிந்ததால், என்று நாம் அடுக்கும் காரணங்கள்
அனைத்திலும் பின்னணியில் இந்த சிந்தனையே உள்ளது. இந்த காரியங்கள் எதில் ஈடுபட்டாலும்
அந்த பெண்ணின் உரிமையை மீறலாம் என்பதை சமூகம் அவர்களுக்கு கற்பித்துள்ளது.
இப்போது யோசித்துப் பாருங்கள்?
இந்த சமுதாயத்தில் உருவான இப்படிப்பட்ட ஒரு மனிதனின் முன்னால் ஒரு பெண் வரும் போது-
அவள் தலை முதல் கால் வரை தன்னை மறைத்திருந்தாலும், வீட்டின் உள் அறையிலேயே பதுங்கி
இருந்தாலும், என்ன வயதாக இருந்தாலும் - அவள் வன்கொடுமைக்கு ஆளாக மாட்டாள் என்று என்ன
நிச்சயம்?
இந்தக் கட்டுரையின் ஆரம்பத்தில்
சொன்ன காரணங்களை திரும்பவும் படித்துப் பாருங்கள். அவை நம் மனதில் உடனடியாக தோன்றுவது
ஏன் என்று யோசித்துப் பாருங்கள். ஒரு சமுதாயமாக நாம் பாலியல் வன்கொடுமை என்பது பெண்ணின்
குற்றமல்ல, அதை நிகழ்த்தும் மனிதர்களும் பாலியல் வேட்கையினால் தூண்டப்படுபவர்கள் அல்ல
என்று உணராமல் இருப்பதே காரணம். இனிமேலாவது எந்த பாலியல் வன்கொடுமை நடந்தாலும் உடனே
அந்தப் பெண் அவ்வாறு நடக்காமல் இருப்பதற்கு என்ன செய்திருக்க வேண்டும் என்று யோசிக்காமல்
அந்த ஆண் எப்படி அந்த மாதிரியான மிருகமானான் என்று நாம் பேச ஆரம்பித்தால் இந்த குற்றங்களை
குறைக்க நமக்கு வழிகள் புலப்படும்.


Comments
Post a Comment