யார் குற்றம்?
மீண்டும் ஒரு பாலியல் வன்கொடுமை. எப்போது இப்படி ஒரு சம்பவம் நடந்தாலும் சமூக வலைத்தளங்கள் போர்களமாகின்றன. அந்த பெண் என்ன செய்திருக்க வேண்டும் என்று ஒரு தரப்பும் பெண்ணை சொல்லாதே நீ பிள்ளையை எப்படி வளர்க்க வேண்டும் என்று யோசி என்று மற்றொரு தரப்பும் மாறி மாறி அவரவர் கோணங்களை பதிவிடுகின்றனர். ஆனால் சில கேள்விகள் தான் திரும்ப திரும்ப எழுகின்றன. பாலியல் வன்கொடுமை யார் நிகழ்த்துகிறார்கள்? ஏன்? பாலியல் வன்கொடுமை நிகழ்ந்த உடன் பலர் சொல்லும் காரணங்கள் மிக எளிமையாக வகைப்படுத்தலாம். நீ ரிஸ்க் எடுத்தே. அப்படித்தானே நடக்கும். (அங்கே ஏன் போனாய்! தனியே ஏன் இருந்தாய்? போன்றவை) நீ அவன் காமத்தை தூண்டினே. அப்படித்தானே நடக்கும். (இப்படி டிரஸ் பண்ணா அவன் என்ன பண்ணுவான்? ஏன் முதலிலேயே நோ சொல்லலை? போன்றவை) நீ சமுதாய கட்டுப்பாட்டை அல்லது வழக்கங்களை மீறிட்டே அப்படித்தானே நடக்கும். (லவ் பண்ணான்னு இப்படி போலாமா? அவளே ஒரு பாலியல் தொழிலாளி. அவளுக்கு என்ன பிரச்சினை? போன்றவை.) இது எதிலும் வராவிட்டால் - ரேப் செஞ்சவனுக்கு மனநலப்பிரச்சினை. அவன் செயல்களை புரிந்துக் கொள்ளவ...
